கோத்தகிரி அருகே, குடிசை வீட்டின் மீது மரம் விழுந்து வாலிபர் பலி - மற்றொருவர் படுகாயம்
கோத்தகிரி அருகே குடிசை வீட்டின் மீது மரம் விழுந்து வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மெட்டுக்கல் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் நிதிஷ்குமார்(வயது 21). அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் சக்திவேல்(21). இவர்கள் 2 பேரும் விவசாயம் செய்து வந்தனர். மேலும் தங்களது வீட்டின் அருகில் காபி உள்ளிட்ட பயிர்களின் நாற்றுகளை விற்பனை செய்யும் நர்சரி அமைத்து நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் நர்சரியில் உள்ள நாற்றுகளை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக, இரவு நேரத்தில் அங்குள்ள குடிசை வீட்டில் நிதிஷ்குமார் மற்றும் சக்திவேல் தங்கியிருந்து காவலில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் 2 பேரும் குடிசை வீட்டில் தங்கியிருந்து காவலில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த பகுதியில் நின்றிருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, நிதிஷ்குமார் மற்றும் சக்திவேல் தங்கியிருந்த குடிசை வீட்டின் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நிதிஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேல் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். மேலும் குடிசை வீடு முழுவதும் சேதம் அடைந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, சக்திவேலை மீட்டனர். பின்னர் அவரை கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர், ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சோலூர்மட்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உயிரிழந்த நிதிஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story