விமானப்படையின் 87-வது ஆண்டுவிழா: கோவையில் விமான கண்காட்சி , மாணவ-மாணவிகள் பார்த்து வியந்தனர்


விமானப்படையின் 87-வது ஆண்டுவிழா: கோவையில் விமான கண்காட்சி , மாணவ-மாணவிகள் பார்த்து வியந்தனர்
x
தினத்தந்தி 30 Sep 2019 10:15 PM GMT (Updated: 30 Sep 2019 6:49 PM GMT)

விமானப்படையின் 87-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவையை அடுத்த சூலூரில் நடைபெற்ற விமான கண்காட்சியை மாணவ-மாணவிகள் பார்த்து வியந்தனர்.

கோவை,

இந்திய விமானப்படையின் 87-வது ஆண்டு விழா வருகிற 8-ந் தேதி கொண்டாடப் படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள விமானப்படை தளங்களில் விமான கண்காட்சி, விமானப்படையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், பாராசூட்டுகள் மற்றும் பொருட்கள் ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இது போல் கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் விமானங்கள் மற்றும் ஆயுதங்களின் கண்காட்சி நடந்தது. இதற்காக அங்குள்ள விமானப்படை தளத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதில் அதிவேகமாக செல்லும் தேஜஸ் போர் விமானம், குண்டு மழை பொழியும் ஏ.என்.32 என்ற வகையை சேர்ந்த போர் விமானம், எம்.ஐ.-17 என்ற ஹெலிகாப்டர், சாரங்க் மார்க்-1 என்ற ஹெலிகாப்டர் ஆகியவை இடம் பெற்று இருந்தன.

இதுதவிர விமானப்படை வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களும் கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட் டன. குறிப்பாக ராக்கெட் லாஞ்சர், ஏ.கே.-56 ரக துப்பாக்கி, சி-தார் ரகத்தை சேர்ந்த நவீன துப்பாக்கி, இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான மெசின் கன் உள்பட பல்வேறு ரகங்களை சேர்ந்த துப்பாக்கிகள் இடம் பெற்றன.

இந்த கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அப்போது அந்த துப்பாக்கிகளை எப்படி பயன்படுத்துவது?, அதில் எத்தனை தோட் டாக்கள் வைக்கலாம் என்பது உ்ளளிட்டவை குறித்து வீரர்கள் விளக்கம் அளித்தனர். அதுபோன்று விமானப்படை வீரர்கள் பயன்படுத்தும் பொருட்கள் எவை? அவற்றை எப்படி பயன்படுத்துவது? அதை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கப்பட்டது.

மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது எப்படி?, பதற்றம் நிறைந்த பகுதியில் ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர் மூலம் விமானப்படை வீரர்கள் சென்று தாக்குதல் நடத்தும் விதம், விமானப்படையில் பயன்படுத்தப்படும் தேஜஸ் போர் விமானத்தின் பயன்பாடு, தாக்குதலில் ஈடுபடும் விதம் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விமானப்படை வீரர் ஒருவர் தேஜஸ் போர் விமானத்தை அதிவேகமாக இயக்கி காட்டினார்.

மேலே பறந்து கொண்டு இருக்கும்போது திடீரென்று டைவ் அடிப்பதுபோன்று சென்று பின்னர் வேகத்தில் மேல் நோக்கி செல்வது, மேல் இருந்து நேராக கீழ் நோக்கி குறிப்பிட்ட தூரம் வந்த பின்னர் மீண்டும் மேல் நோக்கி அதே வேகத்தில் செல்வது போன்று விமானத்தில் சாகசம் செய்து காட்டினர். இதை அங்கு கூடி நின்ற பள்ளி மாணவ-மாணவர்கள் வியப்புடன் பார்த்து கைகளை தட்டி மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.

இந்த கண்காட்சியை பார்க்க வந்த பள்ளி மாணவர்கள் தங்களின் சந்தேகத்தை அங்கு இருந்த விமானப்படை வீரர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவன் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் எப்படி இறங்குகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு விமானப்படை வீரர் ஒருவர், தாங்கள் பயன்படுத்தும் கயிற்றை எடுத்து அதன் மூலம் இறங்குவது குறித்து விளக்கம் அளித்தார்.

அதுபோன்று கட்டிடங்களுக்குள் பயங்கரவாதிகள் மறைந்து இருக்கும்போது தாக்குதல் நடத்துவது எப்படி என்பது குறித்து கேட்டபோது, உள்ளே பதுங்கி இருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி? அதற்கு எந்த கருவிகளை பயன்படுத்துவது என்பது குறித்தும் விமானப்படை வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

மேலும் ஒரு இடத்துக்கு செல்லும்போது விமானப்படை வீரர்கள் எடுத்துச்செல்லும் பொருட்கள், அவற்றை உபயோகிக்கும் முறை ஆகியவை குறித்து விமானப்படை வீரர்கள் விளக்கினர். இதற்கான ஏற்பாடுகளை சூலூர் விமானப்படை அதிகாரி சமீர் பெண்டுசே மற்றும் அதிகாரிகள் செய்து இருந்தனர். 

Next Story