சத்தியமங்கலத்தில் வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்


சத்தியமங்கலத்தில் வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:15 AM IST (Updated: 1 Oct 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு பேராட்டம் நடைபெற்றது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் ஆதி திராவிடர் காலனியில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கு வீட்டு மனை பட்டா வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை. இதனால் பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் சத்தியமங்கலம் பஸ்நிலையம் அருகே ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர்கள் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திண்டுக்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

‘பட்டா கேட்டு இதுவரை பல போராட்டங்கள் நடத்தப்பட்டு விட்டது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போகிறோம்‘ என்று ஆர்ப்பாட்டத்தின்போது பாலபாரதி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 75 பெண்கள் உள்பட 175 பேர் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில் பகல் 2 மணி அளவில் தாசில்தார் கார்த்திக் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது விரைவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story