குடியிருப்பு பகுதிக்கு அருகில் இறந்தவர்களின் உடலை புதைக்கக்கூடாது; குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


குடியிருப்பு பகுதிக்கு அருகில் இறந்தவர்களின் உடலை புதைக்கக்கூடாது; குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

கஸ்பாபேட்டையில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இறந்தவர்களின் உடலை புதைக்கக்கூடாது என்று குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் கன்னங்காட்டுமேடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். நாங்கள் கூலி வேலை செய்கிறோம். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை அல்லது வீடு இல்லை. எனவே சின்னியம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படும் 96 வீடுகளில் எங்களுக்கு வீடுகளை ஒதுக்கி தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

ஈரோடு அருகே உள்ள 46 புதூர் பெரியசெட்டிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து கொள்ளுக்காட்டுமேடு வரை செல்லும் மினிபஸ் எங்களது ஊர் வழியாக இயக்கப்பட்டது. தற்போது அந்த மினிபஸ் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகத்துக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பஸ்சில் ஏற தினமும் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே எங்களது ஊர் வழியாக மீண்டும் மினிபஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று குறிப்பிட்டு இருந்தனர்.

கஸ்பாபேட்டை அரசு பேருந்து நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்களது பகுதிக்கு அருகில் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு வருகிறது. அந்த வழியாகத்தான் நாங்கள் தினமும் நடந்து செல்ல வேண்டியுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே உடல்கள் புதைக்கப்படுவதால் பெண்கள், குழந்தைகள் வெளியில் சென்று வருவதற்கே பயப்படுகிறார்கள். எனவே எங்கள் பகுதிக்கு அருகில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க அனுமதிக்கக்கூடாது”, என்று கூறிஇருந்தனர்.

அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில தலைவர் என்.ஆர்.வடிவேல், ஒருங்கிணைப்பாளர் விஜய்ஆனந்த் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

இந்திய தேசிய தலைவர்களில் ஒருவரான அம்பேத்கரின் உருவசிலை பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் உள்ளன. ஆனால் ஈரோட்டில் அம்பேத்கருக்கு முழு உருவசிலை அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காந்தி, பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் ஈரோட்டில் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அம்பேத்கருக்கு சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும். அனுமதி அளித்தால் எங்களுடைய சொந்த செலவில் முழு உருவசிலை அமைத்துக்கொள்ள தயாராக உள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கவுந்தப்பாடி புதூர், சின்னப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

மதுரையை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் முகவர்களை நியமித்து மாதத்தவணையில் பணத்தை பெற்றுக்கொண்டு நிலமாக அல்லது வட்டியுடன் கூடிய பணமாக கொடுப்பதாக அறிவித்தது. அதை நம்பி பணத்தை முதலீடு செய்தோம். இதேபோல் ஏராளமானவர்கள் பணத்தை முதலீடு செய்தனர். சுமார் ரூ.70 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால் எங்களுக்கு நிலத்தையோ அல்லது பணத்தையோ திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், மோசடி நிறுவனத்தின் சொத்துகளை ஏலம்விட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த நிறுவனத்தின் சொத்துகள் ஏலம் விடப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனவே விரைவில் ஏலம் விட்டு எங்களுடைய பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

அண்ணா திராவிட கழக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சவுகத்அலி கொடுத்த மனுவில், “ஈரோடு திருநகர் காலனியில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் ஆகியன அருகில் இருப்பதால் நோயாளிகள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறிஇருந்தார்.

ஈரோடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு முன்பு விவசாயிகள், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சூரியம்பாளையம் பொதுமக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர். வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சித்தோடு அருகே உள்ள ஓடக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரும், சிறுவலூர் ஊராட்சி ஆயிபாளையம்புதூர் பகுதியில் தொடங்கப்பட உள்ள பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு தடை விதிக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், பவானி அருகே உள்ள ஒலகடம் மும்மிரெட்டிபாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கோவில் கட்டி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் மனுக்கள் கொடுத்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 376 மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில், தண்ணீரில் மூழ்கி இறந்த 3 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிளையும் கலெக்டர் கதிரவன் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி குமார் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story