ஈரோட்டில் அனுமதியின்றி நிலத்தடிநீர் எடுத்து விற்பனை; 4 நிறுவனங்களுக்கு ‘சீல்’


ஈரோட்டில் அனுமதியின்றி நிலத்தடிநீர் எடுத்து விற்பனை; 4 நிறுவனங்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் அனுமதியின்றி நிலத்தடிநீர் எடுத்து விற்பனை செய்த 4 நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு வீரப்பம்பாளையம் ரோடு பகுதியில் அனுமதியின்றி நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்வதால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிட்டது என மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து அவர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 தனியார் நிறுவனங்கள் அனுமதியின்றி நிலத்தடி நீரை கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுத்து சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் அந்த பகுதியில் 2 தனியார் நிறுவனங்களும் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீரை எடுத்து அதை லாரிகளில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 4 நிறுவனங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘தமிழ்நாடு நிலத்தடி நீர் மேலாண்மை சட்டத்தின்படி நிலத்தடி நீரை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நிறைய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை நீர் வளம் மற்றும் மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற்றுத்தான் நடத்த வேண்டும். ஆனால் ஈரோடு மாநகராட்சி பகுதியில் எந்தவித அனுமதியும் பெறாமல் பல்வேறு இடங்களில் நிலத்தடிநீரை எடுத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதுடன், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித பாரபட்சமுமின்றி செயல்பட வேண்டும். தற்போது 4 தனியார் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்ததுபோல், மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் ‘சீல்’ வைக்க வேண்டும்’ என்றனர்.

Next Story