சிவகாசி பகுதியில் விடிய, விடிய மழை


சிவகாசி பகுதியில் விடிய, விடிய மழை
x
தினத்தந்தி 30 Sep 2019 10:30 PM GMT (Updated: 30 Sep 2019 6:52 PM GMT)

சிவகாசி பகுதியில் விடிய, விடிய மழை பெய்த நிலையில் 4 பஞ்சாயத்து மக்களுக்கு குடிநீர் வழங்கி வரும் கங்காகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்துள்ளது.

சிவகாசி,

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தினர். குடிநீர் அல்லாத மற்ற பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. ஒரு டிராக்டர் தண்ணீரை ரூ.1000 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். சிவகாசி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்து 600 அடிக்கும் கீழ் சென்று விட்டது.

இந்தநிலையில் நள்ளிரவு முதல் காலை 7 மணி வரை தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது.

இதனால் நகர் முழுவதும் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. பஸ் நிலையம் உள்ளே குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதால் பயணிகள் பெரும் சிரமப்பட்டனர்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து பகுதியில் கங்காகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து தண்ணீர் எடுத்து செங்கமலநாச்சியார்புரம், பூவநாதபுரம், தேவர்குளம், வெள்ளையாபுரம் ஆகிய பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள 12 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இதற்காக இந்த கண்மாய் பகுதியில் 4 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. 12 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் 4 பஞ்சாயத்துகளுக்கும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடுமையாக குடிநீர் பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் நிலத்தடி தண்ணீர் மூலம் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கங்காகுளம் கண்மாய் நிரம்பியது. அதன் பின்னர் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரத்தே இல்லை. தண்ணீர் இல்லாமல் கங்காகுளம் கண்மாய் மைதானம் போல் காட்சி அளித்தது.

விடிய,விடிய பெய்த மழையால் கங்காகுளம் கண்மாயில் தண்ணீர் வந்து பாதி அளவுக்கு நீர் நிரம்பியது. தகவல் அறிந்த செங்கமலநாச்சியார்புரம், தேவர்குளம் பஞ்சாயத்து அதிகாரிகள் கண்மாய்க்கு வந்து தண்ணீர் வரத்தை கணக்கெடுத்தனர். தண்ணீர் வரத்தால் கரையோர மக்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

கண்மாய்க்கு தண்ணீர் வருவதை அப்பகுதி மக்கள் வந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இன்னும் 2 நாட்கள் மழை பெய்தால் கங்காகுளம் கண்மாய் நிரம்பி விடும் என்று ஒருவர் தெரிவித்தார்.

கண்மாய் நிரம்பி வரும் சூழ்நிலையில் கடந்த காலங்களில் இந்த கண்மாயில் இருந்து மணல் அள்ளப்பட்ட பகுதியில் ராட்சத பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்கள் தற்போது தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது.

பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் பலர் கங்காகுளம் கண்மாய்க்கும், அதன் அருகில் உள்ள கல்கிடங்கில் தேங்கி நிற்கும் தண்ணீரிலும் குளிக்க வருகிறார்கள்.

இவர்கள் கண்மாயில் உள்ள குழியில் சிக்க வாய்ப்பு இருப்பதால் சிறுவர்களை கண்மாய் பகுதிக்கு செல்ல பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று சமூகஆர்வலர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

Next Story