ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பலத்த மழை; 2 வீடுகள் இடிந்தன


ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பலத்த மழை; 2 வீடுகள் இடிந்தன
x
தினத்தந்தி 30 Sep 2019 10:45 PM GMT (Updated: 30 Sep 2019 6:53 PM GMT)

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்ததால் மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் 2 வீடுகள் இடிந்தன.

ராஜபாளையம்,

மழை மறைவு பகுதியாக விருதுநகர் மாவட்டம் மாறியது. தொடர்ந்து மழை பொய்த்து அனைவரும் பாதிக்கப்பட்டனர். சில மாதங்களாக பல இடங்களில் மழை பெய்தாலும் இந்த மாவட்டத்தை பொறுத்தவரை மழை ஏமாற்றியே வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பல இடங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கடந்த ஒரு வருடமாக போதிய மழை இல்லாததன் காரணமாக வறட்சி நிலவியது. மலையடிவார ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீராவி அருவி, முள்ளிக்கடவு ஆறு, மாவரசியம்மன் கோவில் மற்றும் மலட்டாறு போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பக்தர்கள் ஆற்றை கடந்து மறு கரையில் உள்ள அய்யனார் கோவிலுக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மூலம் நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் முடங்கியாற்றில் நீர் நிறைந்து செல்வதால் பிரண்டை குளம், பெரியாதி குளம், புதுக்குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கும் தற்போது தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. இதனால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மலை முழுவதும் பரவலாக கன மழை பெய்ததால், நீராவி அருவி, பல்லிளிச்சான் கணவாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக நீர் வீழ்ச்சி உருவாகி உள்ளது. இதனால் மலையின் எந்த பகுதியில் பார்த்தாலும் நீர் வீழ்ச்சி தெரிவதால் மலை முழுவதும் ரம்மியமாக காட்சி அளிப்பது, காண்போரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம் கருப்பஞானியார் கோவில் தெரு பகுதிகளில் கனமழையினால் கூலி தொழிலாளியான மாரியம்மாள் என்பவரது வீடும் சுந்தரி என்பவரது வீட்டின் ஒரு பகுதியும் இடிந்தது. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார், அப்போது வீட்டினை சரிசெய்வதற்கு ரூ. 10ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அவருடன் தி.மு.க.நகர செயலாளர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், உதுமான் மாயாவி, தமிழரசன், தினேஷ், மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலையில் முக்கிய அருவியான மினி குற்றாலம் என்று அழைக்கப்படும் மீன் வெட்டி பாறை அருவி மற்றும் சரக்கு பாறை அருவி, ராக்காச்சி கோவில் அருவி அங்குள்ள ஓடைகள், யானை கிடங்கு ஆகியவை வறண்டு கிடந்த நிலையில் மழை கொட்டித்தீர்த்தது.செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் அருவிகள் ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

வறண்டு கிடந்த நிலையில் இருந்த அருவிகள், ஓடைகளில் திடீர் வெள்ளம் வந்தவுடன் யானைகள் உள்பட வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள மேடான பகுதிக்கு இரவோடு இரவாக சென்று விட்டன என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றது. மேலும் ஆண்டாள் கோவிலில் பெரியபெருமாள் சன்னதிக்குள் மழை நீர் புகுந்து தேங்கி நின்றது.

தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர், சேத்தூர், சொக்கநாதன் புத்தூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. நள்ளிரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பலத்த மழையினால் தளவாய்புரம் 6-வது வார்டு எம்.ஆர். நகரில் வாருகால் தடுப்பு சுவர் உடைந்து குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து குளம் போல் தேங்கியது. வாருகால்களை அகலப்படுத்தி இடிந்து போன தடுப்பு சுவர்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த மழையினால் செட்டியார்பட்டி முகவூர் செல்லும் சாலையில் உள்ள வாருகால்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் குளம் போல் தேங்கி கிடந்தது. சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் பெய்த பலத்த மழையினால் யாதவர் வடக்கு தெரு பகுதியில் குப்பைகளுடன் ஓடை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஓடையை அகலப்படுத்தி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Next Story