கும்பகோணம் கோட்டத்தில் குளிர்சாதன வசதி கொண்ட 10 புதிய பஸ்கள் இயக்கம் அமைச்சர் தகவல்


கும்பகோணம் கோட்டத்தில் குளிர்சாதன வசதி கொண்ட 10 புதிய பஸ்கள் இயக்கம் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 30 Sep 2019 11:15 PM GMT (Updated: 30 Sep 2019 6:56 PM GMT)

கும்பகோணம் கோட்டத்தில் குளிர்சாதன வசதி கொண்ட 10 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர்,

உலக வெப்பமயமாதலை தடுப்பது, சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்துவது என்கிற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை மற்றும் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சி-40 முகமை ஆகியவற்றுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் மூலமாக கே.எப்.டபிள்யு என்ற வெளிநாட்டு வங்கியின் மூலம் மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி பெற்று 2,000 மின்சார பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட உள்ளது. அதில் முதற்கட்டமாக 300 பஸ்கள் வழங்கப்படவுள்ளது. மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு 520 மின்சார பஸ்களை வழங்க உள்ளது. ஆகமொத்தம் உள்ள 820 மின்சார பஸ்கள் இன்னும் ஓராண்டிற்குள் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட உள்ளது.

முதல் கட்டமாக வழங்கப்பட்ட ஒரு மின்சார பஸ் கடந்த 26-ந்தேதி முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இந்தநிலையில் சி-40 முகமை மூலம் 2-ம் கட்டமாக வழங்கப்பட்ட மின்சார பஸ்சுக்கு, கரூர் கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் பஸ்பாடி நிறுவனத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்தது. சென்னை வழித்தடத்தில் இயக்க உள்ள அந்த மின்சார பஸ்சை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நேரில் பார்வையிட்டு, அதில் பயணம் செய்தார்.

குளிர்சாதன வசதி

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் முதலில் இயக்கப்பட்ட மின்சார பஸ்சானது ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்கக்கூடியதாகும். தற்போது 2-ம் கட்டமாக இயக்கப்படக்கூடிய மின்சார பஸ், ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கிய கட்டுமானப்பணிகள் சென்னையில் முடிவுற்று, சில கட்டுமானப்பணிகளுக்காக கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ள அந்த மின்சார பஸ்சில் தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந் துள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 150 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் 10 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

குறைந்த கட்டணம்

திருச்சி-கோவை வழித்தடத்தில் 3 பஸ்களும், கரூர்-கோவை வழித்தடத்தில் 2 பஸ்களும், திருச்சி-திருப்பூர் வரை 1 பஸ்சும், கரூர் முதல் ராமேசுவரம் வரை மதுரை வழியாக 1 பஸ்சும், கரூர்-திருச்சி வழித்தடத்தில் 2 பஸ்களும், கரூர்-திருச்சி-புதுச்சேரி வழித்தடத்தில் ஒரு பஸ்சும் என மொத்தம் கும்பகோணம் கோட்டத்தில் புதிதாக 10 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதுமட்டுமல்லாது, குறுகிய தூரப்பஸ்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே, திருவண்ணாமலை முதல் சென்னை வரை 3 மற்றும் 2 இருக்கைகள் கொண்ட குறுகியதூர குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கீதா எம்.எல்.ஏ. மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கரூர் மண்டல பொதுமேலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story