உடுமலை அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை; மகன் வெறிச்செயல்


உடுமலை அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை; மகன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:15 AM IST (Updated: 1 Oct 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள அவரது மகனை போலீசார் தேடிவருகிறார்கள்.

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஜே.என். பாளையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கோதண்டசாமி(வயது 65). விவசாயி. இவரது மனைவி செல்வி, இவருக்கு சக்திவேல்குமார்(22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. சக்திவேல்குமாருக்கு திருமணம் ஆகவில்லை.

கடந்த சில மாதங்களாக கோதண்டசாமியிடம் அவரது மகன் சக்திவேல்குமார் சொத்தை எழுதிக்கேட்டு பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கோதண்டசாமி தனது மகனுக்கு சொத்தை எழுதி கொடுக்காமல் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் சக்திவேல்குமார் தனது தந்தையிடம் சென்று சொத்தைதனது பெயருக்குஎழுதி வைக்குமாறு மீண்டும் கேட்டுள்ளார். அதற்கு கோதண்டசாமி மறுத்துவிட்டார். இதன் காரணமாக தந்தை-மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சக்திவேல்குமார் அருகில் கிடந்த தடியை எடுத்து தந்தையின் பின்புற தலையில் பலமாக தாக்கினார். இதனால் நிலைகுலைந்த கோதண்டசாமி அலறியபடி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கோதண்டசாமி வீட்டிற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் கோதண்டசாமி பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த சக்திவேல்குமார் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இது குறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் கோதண்டசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சக்திவேல் குமாரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.சொத்துத் தகராறில் தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம்அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story