அரியலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளின் மதகுகளை பராமரிக்க வேண்டும்


அரியலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளின் மதகுகளை பராமரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Oct 2019 3:45 AM IST (Updated: 1 Oct 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் மதகுகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என்று நீர் நிலைகளின் மேலாண்மைக்குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாவட்ட நீர் நிலைகளின் மேலாண்மைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நீர்நிலைகளின் மேலாண்மைக்குழு தலைவர் பாஸ்கர் வரவேற்புரையாற்றினார். சென்னை சுப்பிரமணியன், சுயாட்சி இயக்க தலைவர் பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தொழில்நுட்ப அலுவலர் மோகனசுந்தரம், இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் ராஜேந்திரன், சமவெளி விவசாயிகள் இயக்க தலைவர் பழனிராஜன் உள்ளிட்டோர் நீர்நிலைகள் குறித்தும், அதனை மேன்மை படுத்துவதன் அவசியம் குறித்தும் பேசினர். இதில் அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், நீர் மேலாண்மையை அரசு மட்டுமே செய்ய வேண்டும் என நினைத்தல் கூடாது. நீர் மேலாண்மையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கு பங்குண்டு. தங்களது வீட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது. அதிக வயல் வைத்திருக்கும் விவசாயிகள் தங்களது வயல்பகுதியில் ஒரு இடத்தில் குட்டை அமைப்பது. வரத்து வாய்க்கால்களை பாதுகாப்பது ஆகியவை தனிமனிதனின் கடமையாகும். அதுபோல், ஏரி, குளம், குட்டைகள் நமது இதயம் போன்றது என்றார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி...

அதனை தொடர்ந்து கூட்டத்தில் மருதை ஆற்றின் இடையே தடுப்பணைகள் கட்டி மழைக்காலங்களில் வரும் உபரி நீரை கரவெட்டி பறவை சரணாலயத்திற்கு கொண்டு வரும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வெட்டி முடிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் நீர் வழித்தடங்களை ஏற்படுத்தி, நீர் தேக்கமாக மாற்றி, நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மேலும் அந்த நீரை பொதுமக்களின் பயன் பாட்டிற்கு பயன்படுத்தும் வகையிலும் அரசு செய்து தர வேண்டும். வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரும் வகையில் சீரமைக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் மதகுகளை ஆய்வு செய்து அதற்கென முறையாக நிதி ஒதுக்கி பராமரிப்பு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் நீர் நிலைபாதுகாப்பு மற்றும் கூட்டமைப்பை சேர்ந்த திருவாரூர் வெண்ணிலா ரவிச்சந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story