விழுப்புரம் அருகே, அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


விழுப்புரம் அருகே, அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2019 10:30 PM GMT (Updated: 30 Sep 2019 8:14 PM GMT)

விழுப்புரம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழகனூர் ஊராட்சியில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

எனவே இதனை கண்டித்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாகவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கிராம மக்கள் நேற்று காலை 9.40 மணி அளவில் சோழகனூருக்கு வந்த அரசு பஸ்சை 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சோழகனூரில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணியில் நடந்த முறைகேட்டை கண்டித்தும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காணை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கலெக்டர் சுப்பிரமணியன் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், உங்கள் கோரிக்கையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், இப்பிரச்சினை குறித்து சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காண வழிவகை செய்வதாகவும் போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் காலை 10.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பிறகு அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றது. இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சுமார் ஒருமணிநேரத்துக்கும் மேலாக பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Next Story