அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் நேற்று மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நகராட்சி ஆணையாளர் பாலு சமாதானப்படுத்தினார். தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் தரமான சாலை வசதி, சுகாதாரமான குடிநீர், வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். மணிமுக்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
விருத்தாசலம் பேருந்து நிலையத்தை பராமரிப்பதுடன், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அண்ணாநகர் 13-வது வார்டில் சொந்த இடம் இல்லாமல் பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகராட்சி ஆணையாளர் பாலுவிடம் கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையாளர் பாலு, கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் ஞானசேகரன், அருண், மகளிரணி கற்பகம், ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story