உடுத்திய துணிகளை கழற்றி வீசிவிட்டு, காட்டுயானையிடம் இருந்து உயிர் தப்பிய தொழிலாளி
சேரம்பாடி அருகே உடுத்திய துணிகளை கழற்றி வீசிவிட்டு, காட்டுயானையிடம் இருந்து தொழிலாளி உயிர் தப்பினார்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி கண்ணம்பள்ளி பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு கண்ணம்பள்ளியில் இருந்து சேரம்பாடிக்கு நடராஜ் என்ற கூலி தொழிலாளி நடந்து சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டுயானை ஒன்று, நடராஜை துரத்தியது. இதை சற்றும் எதிர்பாராத அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். எனினும் அவர் மீண்டும் எழுந்து ஓடினார்.
மேலும் உடுத்தி இருந்த துணிகளை கழற்றி வீசினார். இதை கண்ட காட்டுயானை, துணிகளை கால்களால் மிதித்தது. இதற்கிடையில் நடராஜ் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினார்.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி, வன காப்பாளர் ராபர்ட் வில்சன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் காட்டுயானையின் நடமாட்டம் குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் படுகாயம் அடைந்த நடராஜை பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-1 ஆஸ்பத்திரியை 13 காட்டுயானைகள் முற்றுகையிட்டன.
பின்னர் விடியற்காலை 5 மணிக்கு பந்தலூர்-சேரம்பாடி செல்லும் சாலையில் வந்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர். காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
Related Tags :
Next Story