4 வழிச்சாலை அமைக்க கையகப்படுத்தியதில், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு - விவசாயிகள் கோரிக்கை
4 வழிச்சாலை அமைக்க கையகப்படுத்திய விவசாய நிலத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் இருந்து பழனி வழியாக பொள்ளாச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு அளவீடு பணி நடந்தது. இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, ரெட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக அந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சாலை அமைப்பதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் சாலை அமைக்க கையகப்படுத்திய விவசாய நிலத்துக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச்சாலை பணிக்காக காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, ரெட்டியபட்டி பகுதிகளில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம். இந்த நிலையில் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு தொகை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதனால் ஏற்கனவே விவசாய நிலத்தை இழந்துள்ள நாங்கள், ஏமாற்றம் அடைந்துள்ளோம். அதேநேரம் சத்திரப்பட்டி பகுதியில் ஒரு ஏக்கர் விவசாய நிலத்துக்கு ரூ.33 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் எங்களின் விவசாய நிலத்துக்கு ஒரு ஏக்கருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.35 லட்சம் வழங்க வேண்டும். அதன்மூலம் எங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story