அனைத்து மொழியையும் கற்க வேண்டும்: தமிழை வைத்து அரசியல் வியாபாரம் - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு


அனைத்து மொழியையும் கற்க வேண்டும்: தமிழை வைத்து அரசியல் வியாபாரம் - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Sep 2019 10:45 PM GMT (Updated: 30 Sep 2019 8:36 PM GMT)

தமிழகத்தில் தமிழை வைத்து அரசியல் வியாபாரம் நடப்பதாகவும், அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

பழனி, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று காலை பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். பின்னர் விளா பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானை அவர் தரிசனம் செய்தார். தொடர்ந்து வெளிப்பிரகாரத்தை சுற்றி வழிபட்டார்.

இதனையடுத்து நிருபர்களிடம் அவர் கூறும்போது, அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையேயான கூட்டணி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். அ.தி. மு.க.-பா.ஜ.க. இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுவது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. கஷ்டப்படாமல் குறுக்குவழியில் முன்னேற துடிக்கும் எண்ணம் உள்ளவர்களே ‘நீட்’ தேர்வில் தவறு செய்கிறார்கள். நல்லமுறையில் படித்து டாக்டராகும் மாணவர்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவார்கள். தேர்தல் நிதியாக தி.மு.க. சார்பில், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக கூறப்படும் தகவல் குறித்து மு.க.ஸ்டாலினும், கம்யூனிஸ்டு கட்சியினரும் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பாலு, நகர செயலாளர் ஈஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் தே.மு.தி.க. சார்பில் கட்சியின் ஆண்டு விழா, விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. இதற்கு தே.மு.தி.க. மேற்கு மாவட்ட செயலாளர் பாலு தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வக்கீல் அணி துணைச்செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேற்கு மாவட்ட அவை தலைவர் சிவகுமார் வரவேற்றார். விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டத்தை மதித்து தே.மு.தி.க.வினர் பேனர் வைப்பதில்லை. ஏற்றுமதியை குறைத்து வெங்காய விலையை மத்திய அரசு கட்டுக்குள் வைத்துள்ளது. தமிழ் மொழி முக்கியமானது. அதேநேரத்தில் குடும்பத்தை பாதுகாக்க அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். தமிழ் மொழியை வைத்து தமிழகத்தில் அரசியல் வியாபாரம் செய்யப்படுகிறது. மொழியை வைத்து சூழ்ச்சி செய்வோரை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

சுதந்திர தினம், குடியரசு தின தேதி கூட தெரியாத மு.க. ஸ்டாலின் தமிழை பற்றி பேசுகிறார். வருகிற உள்ளாட்சி தேர்தலில் நானும், விஜயகாந்தும் பட்டி தொட்டியெல்லாம் சென்று பிரசாரம் மேற்கொள்வோம். நடிப்பவர்களை மக்கள் நம்புகிறார்கள். உண்மை பேசுபவர்களை நம்புவதில்லை. போலியானவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மரங் களை வளர்க்க வேண்டும். மழைநீரை சேமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஏழை-எளிய மக்களுக்கு ஆடுகள் மற்றும் ஹெல்மெட்டுகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

Next Story