மணல் கொள்ளை விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி


மணல் கொள்ளை விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
x
தினத்தந்தி 1 Oct 2019 4:00 AM IST (Updated: 1 Oct 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

மணல் கொள்ளை விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

தூத்துக்குடி, 

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சரோஜா, ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, தங்கமணி ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். பிரசாரத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கூட்டணி கட்சியினர் வர உள்ளனர். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து உள்ளது. இதனால் மக்கள் அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு அளிப்பார்கள்.

தி.மு.க.வை பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒரு போலியான நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றினார்கள். தற்போது அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அது வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலிலேயே தெரிந்தது. தப்பித்தோம், பிழைத்தோம் என்றுதான் அவர்களின் நிலை இருந்தது. அங்கு அ.தி.மு.க. 48 சதவீதம் வாக்குகள் பெற்றது. இதனால் மக்கள் உணர தொடங்கி விட்டார்கள்.

அந்த அடிப்படையில் பார்க்கும்போது விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அ.தி.மு.க. வெற்றிபெறும். புதுச்சேரியிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை பொறுத்தவரை, இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர். அ.தி.மு.க. வேட்பாளர் இந்த தொகுதியை சேர்ந்தவர். அவருக்கு நல்ல பெயர் உள்ளது. மேட் இன் இந்தியா போன்று, அவர் மேட் இன் நாங்குநேரி.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சி எடப்பாடி ஆட்சியா? மணல் கொள்ளையர்களின் ஆட்சியா? என்று கேட்கிறார். சாத்தான் வேதம் ஓதும் என்பார்கள். அது போன்றுதான் அவருடைய ஒவ்வொரு சொல்லும் உள்ளது. பழைய வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும். ஆரம்ப காலத்தில் அவர்களின் சொத்து மதிப்பு, தற்போதைய சொத்து மதிப்பு குறித்து கிராப் போட்டால் இமயமலையை தாண்டிவிடும்.

அதாவது, பரங்கிமலையில் இருந்த சொத்து, இமயமலையை தாண்டி போய்விட்டது. ஆனால், அரசு மீது குற்றம் சுமத்த முடியாததால், எதையாவது கூற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அது நிச்சயமாக எடுபட போவது இல்லை.

தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் ரூ.40 கோடி செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர். கணக்கிலேயே ரூ.40 கோடி என்றால், கணக்கில் வராமல் ரூ.1,000 கோடி வரை வேட்பாளர்களுக்கு கொடுத்தது எல்லாம் நிச்சயமாக வெளியில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறும் போது, “ஜெயலலிதாவின் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சி எடப்பாடி ஆட்சியா, மணல் கொள்ளையர்களின் ஆட்சியா என்று கேட்கிறார். அவர் இந்த தேர்தல் முடிவை பார்த்து தெரிந்து கொள்வார்“ என்றார்.

Next Story