உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 1 Oct 2019 3:30 AM IST (Updated: 1 Oct 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீ்ர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவை சேர்ந்த சாமிநத்தம், ஒட்டநத்தம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமங்களில் உள்ள பலர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் சுமார் 16 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். இந்த ஆலை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பொய்யான தகவல்களால் மூடப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருகிறது. சரிவர வேலை இல்லாமல் துயரங்களை சந்தித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் குடும்ப நிலையை புரிந்து கொண்டு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அதேபோல் ஓட்டப்பிடாரம் தாலுகா மேலமடந்தையை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்து வந்தோம். சில வதந்திகள் பரவியதன் காரணத்தால் ஆலை தற்போது மூடப்பட்டு இருக்கிறது. ஆலை மூடப்பட்டது முதல் தற்போது வரை ஆலை நிர்வாகம் எங்களுக்கு ஊதியம் வழங்கி வந்தது. ஆனால் தற்போது நிதி பற்றாக்குறையால் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம். இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் கூறி உள்ளோம். அவர்கள் மேல் அதிகாரிகளிடம் பேசி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையில் எங்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

டி.குமாரகிரி கிராம பொதுமக்கள் மற்றும் ஸ்டொ்லைட் ஒப்பந்த ஊழியர்கள், புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி, புதுப்பச்சேரி பகுதிகளை சேர்ந்த ஸ்டெர்லைட் ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனுக்கள் கொடுத்தனர்.

தூத்துக்குடி சி.ஐ.டி.யு. உப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காலையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் கொடுத்த மனுவில், உப்பள தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பணி இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சீசன் காலங்களில் வேலை நாட்களை குறைத்து விடாமல் வாரம் 6 நாட்கள் வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வருகிற கழிவுநீர் வடிகால் பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைந்து முடித்திட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ம.தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் விளம்பர பலகைகளை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம மக்கள் கொடுத்த மனுவில், தாமிரபரணி மகாபுஷ்கர விழா கடந்த ஆண்டு சிறப்பாக நடந்தது. இந்த ஆண்டு 1.11.2019 முதல் 5.11.2019 வரை தாமிரபரணி மகாபுஷ்கர நிறைவு விழா நடக்க உள்ளது. முறப்பநாடு பகுதியில் நிறைவு விழா நடத்திட உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு வி.எம்.எஸ். நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகே பள்ளி வாசல் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி இருந்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த செவிலியர்கள் பலர் கொடுத்த மனுவில், நாங்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் 12 மாதம் உதவி செவிலியர் பயிற்சி முடித்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எங்கள் பயிற்சி சான்றிதழை ஏற்க மறுத்து, அது செல்லாது என்று கூறிவிட்டனர். மேலும் இந்த பணியிடங்களுக்கு 18 மாதம் உதவி செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்து விட்டனர். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு 12 மாத கால பயிற்சியை ஏற்றுக்கொள்ள ஆவன செய்ய வேண்டும். மேலும் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு எங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Next Story