ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற போது காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் மாணவியின் உடல் கரை ஒதுங்கியது


ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற போது காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் மாணவியின் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 1 Oct 2019 4:00 AM IST (Updated: 1 Oct 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற போது காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் மாணவியின் உடல் கரை ஒதுங்கியது.

பென்னாகரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிலிப்பாக்குட்டை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகள் இந்துஜா (வயது 12). இவள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் மகாதேவன் தனது குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றார். அப்போது ஊட்டமலை பரிசல் துறையில் குளித்த போது மாணவி இந்துஜா திடீரென காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

அவரை பெற்றோர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பரிசல் ஓட்டிகள், மீனவர்கள் உதவியுடன் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை மாணவி இந்துஜாவின் உடல் ஊட்டமலை பகுதியில் காவிரி ஆற்றில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றினர். தகவல் அறிந்து வந்த மாணவியின் பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவியின் உடலை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி இறந்தது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு பெற்றோருடன் சுற்றுலா வந்த மாணவி காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story