புதிய குத்தகை தொகை நிர்ணயம் செய்ய கோரி பர்மா பஜாரில் கடைகள் அடைப்பு கலெக்டரிடம் வியாபாரிகள் மனு


புதிய குத்தகை தொகை நிர்ணயம் செய்ய கோரி பர்மா பஜாரில் கடைகள் அடைப்பு கலெக்டரிடம் வியாபாரிகள் மனு
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

புதிய குத்தகை தொகை நிர்ணயம் செய்ய கோரி தஞ்சை பர்மா பஜாரில் கடைகளை அடைத்து கலெக்டரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் அருகே பர்மா பஜாரில் 108 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு குத்தகை தொகையாக ஆண்டுக்கு ரூ.1,650 செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு வரியாக ரூ.2,072 செலுத்தப்படுகிறது. இந்தநிலையில் ஒவ்வொரு கடைக்கும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் நிலுவைத் தொகையை உடனே செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நோட்டீஸ் அளித்து கடை காலி செய்யப்படும் எனவும் கடை வியாபாரிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் கடிதம் அனுப்பினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கடை வியாபாரிகள், ஆண்டுக்கு புதிய குத்தகை தொகை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், ஆண்டுதோறும் குத்தகை செலுத்தி வரும் நிலையில் திடீரென கடைக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் எந்த அடிப்படையில் கட்ட வலியுறுத்தப்படுகிறது என்பதை வருவாய்த்துறையினர் விளக்க வலியுறுத்தியும் பர்மாபஜார் வியாபாரிகள் நேற்று கடைஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டரிடம் மனு

இதனால் செல்போன் கடை, ஜவுளி கடை உள்ளிட்ட 108 கடைகளும் அடைக்கப்பட்டன. இந்தநிலையில் பர்மாபஜார் வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் கதிரேசன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூலை மாதம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு ஆண்டிற்கு தரைக்கான குத்தகை தொகை ரூ.1,650-ல் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி, குத்தகை தொகையை செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்தனர். தொகை பெரியஅளவில் இருப்பதால் நாங்கள் குறைக்க வேண்டும் என கேட்டு கொண்டதால் தற்போது ஒவ்வொரு கடைக்கும் ரூ.6 ஆயிரம் கட்டுங்கள் எனவும், மீதமுள்ள ரூ.6 ஆயிரத்தை பிறகு செலுத்துங்கள் எனவும் தெரிவித்தனர். நாங்கள் அனைவரும் ரூ.6 ஆயிரம் தொகையை கிராம நிர்வாக அலுவலரிடம் செலுத்திவிட்டோம்.

வாழ்வாதாரம்

இப்போது திடீரென ரூ.1 கோடியே 19 லட்சத்து 23 ஆயிரத்து 629 நிலுவைத் தொகை உள்ளது எனவும், ஒவ்வொரு கடைக்கும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை உடனே செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனஉளைச்சலையும் தருகிறது. நாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி தான் பிழைப்பு நடத்துகின்றோம். எங்கள் வாழ்வாதாரமே இதை நம்பி தான் உள்ளது.

சென்ற காலங்களில் குத்தகை நிலுவையில் உள்ளது என்பதற்கு இடம் அளிக்காமல் மாதம் ஒன்றுக்கு இடத்திற்கான புதிய குறைந்த குத்தகை தொகையை நிர்ணயம் செய்து எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நிலுவைத் தொகை என ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் அது எப்படி வந்தது என எங்களுக்கு தெளிவாக தெரிவித்தால் தவணை முறையில் செலுத்துவோம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story