இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2019 4:45 AM IST (Updated: 1 Oct 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பா.ஜனதாவை சேர்ந்த உமேஷ்கட்டி எம்.எல்.ஏ., 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு டிக்கெட் கிடைக்கும் என்று கூறினார். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தங்களின் வழியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, பா.ஜனதா சார்பில் போட்டியிட விரும்பும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு இடைத்தேர்தலில் டிக்கெட் கொடுப்பது நமது கடமை என்று கூறியுள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும்.

அதனால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குழப்பம் அடைய தேவை இல்லை. அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கும். அவர்களின் வெற்றிக்கு பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாடுபடுவார்கள். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த 10 முதல் 12 பா.ஜனதா நிர்வாகிகளுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும். இதுகுறித்து இன்னும் 3, 4 நாட்களில் மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பாவின் இந்த கருத்து குறித்து தகுதி நீக்க எம்.எல்.ஏ. பி.சி.பட்டீல் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “எங்களுக்கு டிக்கெட் வழங்குவதாக எடியூரப்பா கூறிய கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசித்து பா.ஜனதாவில் சேருவது குறித்து முடிவு எடுக்கப்படும். முதலில் எங்கள் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வர வேண்டும். அதன் பிறகு நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம்“ என்றார்.

Next Story