காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 12 பேர் வேட்புமனு தாக்கல்


காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 12 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 1 Oct 2019 12:00 AM GMT (Updated: 30 Sep 2019 11:35 PM GMT)

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்பட மொத்தம் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. ஆனால் முதல் 4 நாட்கள் வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை.

கடந்த 27-ந்தேதி அகில இந்திய மக்கள் கழக வேட்பாளர் கோவிந்தராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா, சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லெனின்துரை என்ற காளிமுத்து ஆகிய 3 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். இதையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோருடன் காங்கிரஸ் வேட்பாளரான ஜான்குமார் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார்.

அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டார். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன், வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர் முருகன், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் சஞ்சீவி மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் வந்தனர்.

உப்பளத்தில் உள்ள சுற்றுலா துறை அலுவலகத்துக்கு வந்ததும் முதல் அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோருடன் வேட்பாளர் ஜான்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூரிடம் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அப்போது 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

காமராஜ் நகர் இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. நேரு அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து முன்கூட்டியே ஆதரவு திரட்டினார். இதுகுறித்து கூட்டணி தர்மத்தை மீறுவதாக அ.தி.மு.க. கருத்து தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த நேரு கட்சி தலைமை மீது கடுமையாக விமர்சித்தார். இதனால் புதிய வேட்பாளரை தேடவேண்டிய தர்ம சங்கடத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் தள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக தொழிலதிபரான புவனா என்ற புவனேஸ்வரன் அறிவிக்கப்பட்டார்.

அதன்படி வேட்புமனுக்களை தயார் செய்த புவனேஸ்வரன் கதிர்காமம் முருகன் கோவிலில் நேற்று காலை நடந்த சிறப்பு பூஜையிலும், அப்பா பைத்தியசாமி கோவிலில் நடந்த பூஜையிலும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து ரங்கசாமியுடன் உப்பளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு வந்த புவனேஸ்வரன் தேர்தல் அதிகாரி முகமது மன்சூரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், சுகுமாறன், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பாரதீய ஜனதா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட முன்னாள் எம்.பி. கண்ணன் தலைமையிலான மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் வெற்றிசெல்வம், மாற்று வேட்பாளராக செண்பகவள்ளி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் தேவிகா(மாற்றுவேட்பாளர்), மக்கள் விடுதலை கட்சி சார்பில் பார்த்தசாரதி ஆகியோரும், சுயேட்சையாக ஜார்ஜ் அகஸ்டின், சகாயராஜ், சுகுமாறன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடைசி நாளான நேற்று ஒரே நாளில் 9 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே 3 பேர் வேட்புமனு செய்துள்ளதையும் சேர்த்து 12 பேர் வேட்புமனு செய்துள்ளனர். மொத்தம் 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று(செவ்வாய்க்கிழமை) பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுக்களை வாபஸ்பெற 3-ந்தேதி(வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Next Story