பஸ் நிலையம் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு வியாபாரிகள் கடை அடைப்பு பொதுக்கூட்டத்தில் வசந்தகுமார் எம்.பி. பங்கேற்பு


பஸ் நிலையம் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு வியாபாரிகள் கடை அடைப்பு பொதுக்கூட்டத்தில் வசந்தகுமார் எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Oct 2019 10:00 PM GMT (Updated: 1 Oct 2019 2:40 PM GMT)

களியக்காவிளை பஸ் நிலையம் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கண்டன பொதுக்கூட்டத்தில் வசந்தகுமார் எம்.பி. கலந்து கொண்டார்.

களியக்காவிளை,

குமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் தினசரி சந்தை உள்ளது. இங்கு காய்கறி வியாபாரம் மற்றும் மீன் வியாபாரம் மும்முரமாக நடைபெறும். குமரி மாவட்டம் மட்டும் இன்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு மீன் வியாபாரத்துக்காக வருவது வழக்கம்.

இந்த நிலையில் களியக்காவிளை பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக சந்தையை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சந்தையை அகற்றினால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

கடையடைப்பு

எனவே வியாபாரிகள் பாதிக்காத வகையில் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நேற்று நடந்தது.

இதைத் தொடர்ந்து மீன்சந்தை மற்றும் காய்கறி சந்தையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் களியக்காவிளை சந்தையில் கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

வசந்தகுமார் எம்.பி.

முன்னதாக பஸ் நிலையம் விரிவாக்கம் தொடர்பாக களியக்காவிளை சந்திப்பில் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு சங்க தலைவர் பிராங்கிலின் தலைமை தாங்கினார். வசந்தகுமார் எம்.பி., மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணை தலைவர் ஜார்ஜ், மாவட்ட தலைவர் டேவிட்சன், களியக்காவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு பணியாளர் மெஸ்மின், செயலாளர் வில்லியம், மீன் வியாபாரிகள் சங்க தலைவர் பத்ரோஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story