மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவு


மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவு
x
தினத்தந்தி 1 Oct 2019 10:00 PM GMT (Updated: 1 Oct 2019 3:18 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 
கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும். அனைத்து குடிநீர் தொட்டிகளிலும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதை சுகாதார பணியாளர்கள் கண்காணித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

கொசு ஒழிப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ள களப்பணியாளர்கள், காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசு உற்பத்தியிடங்களை அழித்தல், அப்புறப்படுத்துதல், புகை மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணியை சுகாதாரத்துறை ஊழியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் கொசுப்புழு இல்லாத நிலையை உருவாக்கி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும்.

மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேசிய ஊரக நலப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், தேசிய மாணவர் படையினர் ஆகியோர் பொது சுகாதாரத்துறையுடன் சேர்ந்து துப்புரவு பணியை தீவிரப்படுத்த வேண்டும். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். காய்ச்சல் தடுப்பு முகாமும் நடத்தப்பட வேண்டும்.

அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் காய்ச்சலால் வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளித்து நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். காய்ச்சல் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மருத்துவ முகாம், கொசு ஒழிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அனைத்து வகையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

தொற்றுநோய்கள் பரவும் விதம் குறித்தும் அவற்றை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு விதமான நலக்கல்விகள் சுகாதாரத்துறையின் மூலமாக பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி விழுப்புரம் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நலப்பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பாலுசாமி, ஜெமினி, தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் சுகந்தி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் சுதாகர், குடும்ப நல துணை இயக்குனர் நேரு உள்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Next Story