செஞ்சி அருகே, சரக்கு வாகனம் வெடித்து சிதறிய இடத்தை மத்திய அதிகாரிகள் ஆய்வு


செஞ்சி அருகே, சரக்கு வாகனம் வெடித்து சிதறிய இடத்தை மத்திய அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 1 Oct 2019 10:30 PM GMT (Updated: 1 Oct 2019 3:57 PM GMT)

செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்குவாகனம் வெடித்து சிதறிய இடத்தை மத்திய வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

செஞ்சி,

புதுச்சேரி முருங்கம்பாக்கத்தில் உள்ள பட்டாசு குடோனில் இருந்து நேற்று முன்தினம் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள வடவானூர் அருகே வந்தபோது அந்த வாகனம் வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் சரக்குவாகனத்தின் டிரைவர் இளவரசன், இவருடன் வந்த பட்டாசு கடை ஊழியர் சாய்பாபா, விபத்து நடந்த இடத்தில் உள்ள டீக்கடைக்காரர் சாதிக்பாட்ஷா ஆகியோர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் அந்த பகுதியில் நின்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் என 16 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவுசெய்து பட்டாசு குடோன் உரிமையாளர் புதுச்சேரி முருங்கம்பாக்கத்தை சேர்ந்த வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய வெடிபொருள் துணை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மான்மீட்சிங் மற்றும் ஷேக் உசேன் ஆகியோர் நேற்று சரக்கு வாகனம் வெடித்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். அப்போது சரக்குவாகனம் வெடி விபத்துக்கு காரணமான வெடிமருந்து எந்த வகையை சேர்ந்தது என்பதை ஆய்வுசெய்வதற்காக அந்த பகுதியில் கிடந்த வெடி பொருட்களின் சிதறிய பாகங்கள், வெடிக்காத பட்டாசுகள் ஆகியவற்றை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

அப்போது செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர சுப்பிரமணியம், குமார் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் சரக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது பட்டாசுகள்தானா அல்லது கல் குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களா என போலீசாரும் விசாரணை செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்தில் பலியான டிரைவர் இளவரசன், சாய்பாபா, சாதிக்பாட்ஷா ஆகிய 3 பேரின் உடல்களும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதபரிசோதனை முடிந்து நேற்று அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 3 பேரின் உடல்களை பார்த்து அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர்.

Next Story