தொடர் மழையால், முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது - வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு


தொடர் மழையால், முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது - வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2019 10:30 PM GMT (Updated: 1 Oct 2019 4:19 PM GMT)

தொடர் மழையால் முதுமலை வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் வனவிலங்குகள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் முதுமலை புலிகள் காப்பகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இந்த புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள், கரடிகள் உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. 

அந்த வனவிலங்குகள் வாழ ஏற்ற காலநிலையும், இயற்கை சூழலும் அமைந்து உள்ளதால் முதுமலையில் அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் காட்டுயானைகள், செந்நாய்கள் போன்ற வனவிலங்குகள் காலத்திற்கு ஏற்ப வேறு வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்லும் தன்மை கொண்டு உள்ளன. குறிப்பாக கோடை காலத்தில் வறட்சி ஏற்படும்போது இந்த வனவிலங்குகள் நீர்நிலைகள் மற்றும் உணவு தேடி மற்ற வனப்பகுதிக்கு செல்லும். மழை பெய்து பசுமை திரும்பியவுடன் மீண்டும் முதுமலை வனப்பகுதிக்கு வரும் வழக்கத்தை கொண்டு உள்ளன.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. மேலும் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனங்களும், தண்ணீரும் நன்றாக உள்ளது. இதையொட்டி வறட்சியின்போது இடம் பெயர்ந்து சென்ற வனவிலங்குகள் தற்போது கூட்டம், கூட்டமாக வர தொடங்கி உள்ளன. இதனால் சமீப காலமாக முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக அதிக எண்ணிக்கையில் காட்டுயானைகளை காண முடிகிறது. அத்துடன் அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள அரிய வகை செந்நாய்களும் தென்படுகின்றன.

குறிப்பாக காலை முதல் மாலை வரை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் வாகன சவாரி மற்றும் யானை சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் இவற்றை அதிகளவில் பார்த்து வருகின்றனர்.

காட்டுயானைகளை தனியாகவும், கூட்டமாகவும் காணும் சுற்றுலா பயணிகள் செந்நாய்களை கூட்டமாக பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகின்றனர்.

இந்த செந்நாய்கள் மிகவும் தந்திரமாக வேட்டையாடும் தன்மை கொண்டவை ஆகும். புள்ளி மான், கடமான் உள்ளிட்ட மான்களை வேட்டையாடி சில நிமிடங்களில் முழுவதுமாக சாப்பிடும் திறன் கொண்ட ஒரு விலங்கினமாகும். பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிகளில் மறைந்து வாழும் இந்த செந்நாய்களை காண்பது மிகவும் அரிது. முதுமலையில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story