டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு பாதையில் மிளகாய் பொடியை தூவி சென்ற மர்ம நபர்கள்


டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு பாதையில் மிளகாய் பொடியை தூவி சென்ற மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாமல் இருக்க திருடர்கள் பாதையில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி திருமணஞ்சேரி விலக்கு சாலையில், டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கறம்பக்குடியை சேர்ந்த சிவக்குமார் மேற்பார்வையாளராகவும், ராஜ்குமார், வீராச்சாமி ஆகியோர் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு விற்பனை தொகையை மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக மேற்பார்வையாளர் சிவக்குமார் எடுத்து சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதுகுறித்து மேற்பார்வையாளர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சிவக்குமார் கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ரூ.1லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள்

அங்கு டாஸ்மாக் கடையின் ஷட்டர்கள் கடப்பாறை கம்பியால் பெயர்த்து பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கதவு மற்றும் பாதையில் மிளகாய் பொடிகளும் தூவப்பட்டிருந்தன. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, மதுபாட்டில்கள் கலைக்கப்பட்டிருந்தன. கணக்கெடுத்து பார்த்தபோது ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மேற்பார்வையாளர் சிவக்குமார் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இரும்பு கதவின் பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பதும், அடையாளம் தெரியாமல் இருக்க மிளகாய் பொடியை தூவி சென்றிருப்பதும் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே நேற்று கறம்பக்குடி பகுதி முழுவதும் கறம்பக்குடி போலீசார் சார்பில், ஆட்டோவில் ஒலிப்பெருக்கி விளம்பரம் செய்யப்பட்டது. அதில் கறம்பக்குடி பகுதியில் புதிய நபர்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும், திருட்டுச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டது. மேலும் சந்தேகப்படும் படியான நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கும் படியும் கூறப்பட்டது. 

Next Story