தனியார் பஸ் மோதி மினி லாரி தீப்பிடித்தது; டிரைவர் படுகாயம்


தனியார் பஸ் மோதி மினி லாரி தீப்பிடித்தது; டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Oct 2019 3:30 AM IST (Updated: 1 Oct 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தனியார் பஸ் மோதி மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

ஈரோடு,

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 55). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 4 மணிஅளவில் மினி லாரியை குமார் ஓட்டிச்சென்றார். அந்த மினிலாரி ஈரோடு நாச்சியப்பா வீதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பவானியில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா நோக்கி சென்ற தனியார் டவுன் பஸ் ஒன்று ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நாச்சியப்பா வீதியை நோக்கி வெளியே வந்தது. இதில் கண்இமைக்கும் நேரத்தில் தனியார் பஸ், மினி லாரியின் மீது மோதியது.

இந்த விபத்தில் மினி லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும், டிரைவர் குமார் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர் மினிலாரியில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்தில் சிக்கிய மினிலாரி தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகில் உள்ள கடைகளில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து அக்கம் பக்கத்தினர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நாச்சியப்பா வீதிக்கு வெளியே வரும் நுழைவு வாயில் பகுதியில் பெரும்பாலான பஸ்கள் வேகமாக வந்து திரும்புகின்றன. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story