சென்னிமலை அருகே 30-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் அவதி; டாக்டர்கள் முகாம் அமைத்து தீவிர சிகிச்சை


சென்னிமலை அருகே 30-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் அவதி; டாக்டர்கள் முகாம் அமைத்து தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 1 Oct 2019 10:30 PM GMT (Updated: 1 Oct 2019 5:32 PM GMT)

சென்னிமலை அருகே 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் முகாம் அமைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சென்னிமலை,

சென்னிமலை அருகே உள்ள வரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது மேற்கு சாணார்பாளையம் கிராமம். இங்கு 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக மேற்கு சாணார்பாளையத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து இங்கு சென்னிமலை அரசு மருத்துவமனை சார்பில் முகாம் அமைக்கப்பட்டது. முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு டாக்டர்கள் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை செய்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30 பேரில் 6 பேர் உடனடியாக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கும், பி.காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

4 டாக்டர்கள் 15-க்கும் மேற்பட்ட நர்சுகள் நடமாடும் மருத்துவமனை மூலம் மேற்கு சாணார்பாளையத்தில் உள்ள முகாமில் பொதுமக்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை முகாமுக்கு வந்து சந்தித்து தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ ஆறுதல் கூறினார். மேலும் டாக்டர்களிடம் உரிய சிகிச்சைகளை தாமதமின்றி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Next Story