கோத்தகிரி அருகே, குடிபோதையில் மைத்துனரை வெட்டி கொன்ற தொழிலாளி கைது


கோத்தகிரி அருகே, குடிபோதையில் மைத்துனரை வெட்டி கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 1 Oct 2019 11:00 PM GMT (Updated: 1 Oct 2019 5:57 PM GMT)

கோத்தகிரி அருகே குடிபோதையில் மைத்துனரை வெட்டி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா கூட்டாடா அருகே உள்ள வாகப்பனை என்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் ரங்கன்(வயது 26). தொழிலாளி. இவருக்கும், செம்மனாரையை சேர்ந்த ரங்கசாமி மகள் நீலி(25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக ரங்கன் தனது மனைவியுடன் செம்மனாரையில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரங்கன் தனது மனைவியின் தம்பியான பிரகா‌‌ஷ்(19) என்பவருடன் இணைந்து, வீட்டில் வளர்த்து வந்த ஆட்டை மற்றொருவரிடம் விற்றுவிட்டார். அந்த பணத்தில் 2 பேரும் மது வாங்கி குடித்தனர். பின்னர் இரவு 8 மணியளவில் அவர்கள் வீடு திரும்பினர். பின்னர் ஆடு விற்பனை செய்தது தொடர்பாக திடீரென 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது வீட்டில் தூங்கி கொண்டு இருந்த தனது மனைவி நீலியை எழுப்பி ரங்கன் தகராறில் ஈடுபட்டார். இதை கண்ட பிரகா‌‌ஷ், அவரை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரங்கன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, மைத்துனர் என்றும் பாராமல் பிரகாஷை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க முயன்ற பிரகா‌ஷின் தாயார் ராஜம்மாளின்(42) கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

மேலும் ரத்த வெள்ளத்தில் பிரகா‌‌ஷ் மற்றும் ராஜம்மாள் துடித்து கொண்டிருந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரகா‌‌ஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாயார் ராஜம்மாளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் வாகப்பனையில் உள்ள தனது வீட்டுக்கு ரங்கன் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசில் நேற்று புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் வாகப்பனைக்கு விரைந்து சென்றனர். பின்னர் தனது வீட்டில் இருந்த ரங்கனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

கோத்தகிரி பகுதியில் சமீபத்தில் நடந்த 3-வது கொலையாகும் இது. குடிபோதையால் நிகழும் இதுபோன்ற கொலைகளால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Next Story