வடமாநில வியாபாரியிடம் வெங்காயம் வாங்கி ரூ.10½ லட்சம் மோசடி - தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


வடமாநில வியாபாரியிடம் வெங்காயம் வாங்கி ரூ.10½ லட்சம் மோசடி - தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Oct 2019 9:45 PM GMT (Updated: 1 Oct 2019 6:34 PM GMT)

வடமாநில வியாபாரியிடம் வெங்காயம் வாங்கி ரூ.10½ லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி ராம்பாவ் (வயது 39), வெங்காய மொத்த வியாபாரி. இவரை ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் தொடர்பு கொண்டு, தான் தனியார் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வியாபாரம் செய்து வருவதாகவும், தனக்கு 25 டன் வெங்காயம் வேண்டும் என்றும் கூறினார். வெங்காயத்தை பெற்றுக்கொண்டதும் அதற்கான தொகை ரூ.10½ லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாகவும் கூறினார்.

அதை நம்பிய சிவாஜி ராம்பாவ் லாரி மூலம் 25 டன் வெங்காயத்தை அனுப்பி வைத்தார். அந்த லாரி கோவை உக்கடம் வந்ததும், அதை பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெண் ஊழியர் ஆகியோர் வந்து அவற்றை பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் லாரி வாடகையாக டிரைவர் பாலமுருகனிடம் ரூ.82 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, வெங்காயத்தை மற்றொரு லாரியில் ஏற்றி புஞ்சை புளியம்பட்டிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் குறிப்பிட்ட நாளில் சிவாஜி ராம்பாவ் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தவில்லை. இதையடுத்து அவர் பாலகிருஷ்ணன் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பலமுறை தொடர்பு கொண்டபோதும் பேசமுடியவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் புஞ்சை புளியம்பட்டிக்கு சென்று விசாரித்தபோது பாலகிருஷ்ணன் நடத்தி வந்த தனியார் ஏஜென்சி நிறுவனம் கடந்த 2 மாதத்துக்கு முன்பே மூடப்பட்டு இருப்பதும், தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது. இந்த ரூ.10½ லட்சம் மோசடி குறித்து அவர் புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

இந்த சம்பவம் நடந்தது கோவையில் உள்ள செல்வபுரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் செல்வபுரம் போலீசில் புகார் செய்யும்படி புஞ்சை புளியம்பட்டி போலீசார் கூறினார்கள். இதையடுத்து அவர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பாலகிருஷ்ணன், மற்றும் அவருடன் வந்த பெண் ஊழியர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையை சேர்ந்த போலீசார் அவர்கள் 2 பேரின் செல்போன் எண்களை வைத்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story