திருச்செந்தூரில் துணிகரம்: விவசாயி வீட்டில் கதவை உடைத்து 39 பவுன் நகை கொள்ளை
திருச்செந்தூரில் விவசாயி வீட்டில் கதவை உடைத்து 39 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு அவர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ராமசாமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 73). விவசாயி. இவருடைய மனைவி அன்புகனி. இவர்களுக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவர்களில் 4 மகள்கள், 2 மகன்களுக்கு திருமணமாகி விட்டது.
இளைய மகன் முனியசெல்வன், நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று லட்சுமணன் தன்னுடைய மனைவிக்கு பல் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, சென்னையில் உள்ள மகளின் வீட்டுக்கு அழைத்து சென்றார். முனியசெல்வன் வழக்கம்போல் காலையில் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இவர்களது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள், அங்குள்ள 2 பீரோக்களை உடைத்து, அதில் இருந்த 39 பவுன் தங்க நகைகள், 3 வெள்ளி டம்ளர்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
மாலையில் கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி வந்த முனியசெல்வன், வீட்டின் கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததையும், நகைகள், பணம் திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த வீடானது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. வீட்டின் பின்புறம் தோட்டம் உள்ளது. இதனால் தோட்டத்தின் வழியாக வந்த மர்மநபர்கள், வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story