ஓடும் ரெயிலில், மூதாட்டியை தூங்க விடாமல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு


ஓடும் ரெயிலில், மூதாட்டியை தூங்க விடாமல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Oct 2019 10:00 PM GMT (Updated: 1 Oct 2019 6:48 PM GMT)

ஓடும் ரெயிலில் மூதாட்டியை தூங்க விடாமல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி கடந்த ஆண்டு மே மாதம் ஐலேன்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு வசதி கொண்ட பெட்டியில் பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி சென்றார்.

அதே பெட்டியில் பயணம் செய்த கோவையை சேர்ந்த கணேஷ் (வயது 33) என்பவர் அந்த மூதாட்டியை, தூங்க விடாமல் செய்வது, பேசிக்கொண்டே இருப்பது போன்ற தொந்தரவை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.

இதுகுறித்து அந்த மூதாட்டி ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தார். மேலும் அவரும் கணேசை எச்சரித்தபோதும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த மூதாட்டிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த ரெயில் திருப்பூர் வந்தபோது, கணேசை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இது தொடர்பான வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கண்ணன், குற்றம் சாட்டப்பட்ட கணேசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து கணேசை போலீசார் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story