சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு முறுக்கு தயாரிக்கும் கருவியில் மறைத்து ரூ.21 லட்சம் தங்க பிஸ்கட் கடத்தல் வாலிபர் கைது


சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு முறுக்கு தயாரிக்கும் கருவியில் மறைத்து ரூ.21 லட்சம் தங்க பிஸ்கட் கடத்தல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு முறுக்கு தயாரிக்கும் கருவியில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.21 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக ஆந்திர மாநில வாலிபரை கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்துவரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சவுதி அரேபியாவில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சதாம் உசேன் (வயது 25) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் முறுக்கு தயாரிக்கும் கருவி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதை பிரித்து பார்த்தபோது அதன் உள்ளே 6 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.21 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 555 கிராம் தங்க பிஸ்கட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திர வாலிபர் சதாம் உசேனை கைது செய்தனர். மேலும் அவரிடம், அந்த தங்கத்தை அவர் யாருக்காக சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story