கோவில்பட்டி அருகே குப்பை ஏற்றி வந்த டிராக்டர் சிறைபிடிப்பு


கோவில்பட்டி அருகே குப்பை ஏற்றி வந்த டிராக்டர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2019 3:15 AM IST (Updated: 2 Oct 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே குப்பை ஏற்றி வந்த டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சி பஞ்சாயத்து அத்தைகொண்டான் கிராமத்தில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை சமூக ஆர்வலர்கள் தூர்வாரி, கண்மாயின் கரையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது பெய்த மழையால், கண்மாயில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்த நிலையில் இனாம் மணியாச்சி பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை டிராக்டரில் எடுத்து சென்று, அத்தைகொண்டான் கண்மாயின் கரையில் துப்புரவு பணியாளர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் நாளடைவில் கண்மாய் முழுவதும் குப்பைகளாக காட்சி அளிக்கிறது.

நேற்று காலையில் துப்புரவு பணியாளர்கள் வழக்கம்போல் டிராக்டரில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு, அத்தைகொண்டான் கண்மாய் கரையில் கொட்ட சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை தலைமையில் அப்பகுதி மக்கள் டிராக்டரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அத்தைகொண்டான் கண்மாய் கரையில் குப்பைகளை கொட்டக்கூடாது.

ஏற்கனவே அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட டிராக்டரை பொதுமக்கள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story