குடிமராமத்து பணிகளில் சிவகங்கை மாவட்டம் முதல் இடம் - அமைச்சர் பாஸ்கரன் தகவல்


குடிமராமத்து பணிகளில் சிவகங்கை மாவட்டம் முதல் இடம் - அமைச்சர் பாஸ்கரன் தகவல்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:00 AM IST (Updated: 2 Oct 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து பணிகளில் தமிழகத்திலேயே சிவ கங்கை மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கை வட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் பெரியாறு பாசன கால்வாய் கோட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டார். அவர் சிவகங்கையை அடுத்த மேலப்பூங்குடியில் பெரிய கண்மாய் மற்றும் வில்லிப்பட்டி கிராமத்தில் உள்ள பாசன கண்மாய், நாமனூர் ஊராட்சியில் உள்ள ஆதினக்கண்மாய் ஆகியவைகளை பார்வையிட்டு அங்கு நடைபெற்ற குடிமராமத்து பணிகளையும், தற்போது பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதையும் அவர் பார்வையிட்டார்.

நாமனூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 10 கண்மாய்களுக்கு, பெரியாறு பாசன கால்வாயில் இருந்து தண்ணீர் வருகிறது. அதில் கண்மாய்பட்டி என்ற கிராமத்தில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவிற்கு சிமெண்டு கால்வாய் கட்டப்பட்டுள்ளதையும், பெரிய, சிறிய கண்மாய்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள மடைகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

அமைச்சருடன், கலெக்டர் ஜெயகாந்தன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்வி.சந்திரன், பெரியாறு பாசன வடிநில கோட்ட உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் மானாகுடி சந்திரன், சசிக்குமார், பாலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:- விவசாயிகள் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற நோக்குடன், குடிமராமத்து பணி தொடங்கப்பட்டு அனைத்து இடங்களிலும், பொதுப்பணித்துறையின் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் விவசாயிகள், பொதுமக்கள் தாமாக முன்வந்து குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பெரியார் பாசன கால்வாய் கோட்டத்தின் கீழ் சிவகங்கை வட்டத்தில் 17 கண்மாய்கள் மற்றும் வரத்துகால்வாய்கள் ரூ.4 கோடியே 38 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை சுமார் 70 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படவுள்ளன. இதன் மூலம் 734 ஏக்கர் விளைநிலங்கள் பயனடைய உள்ளன.

மாவட்டத்தில் 110 கண்மாய்களுக்கு ரூ.38 கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் பாசனக் கண்மாயின் உட்பகுதியை ஆழப்படுத்தியும், சீமைக்கருவேல மரங்களை அகற்றியும், கரைகள் பலப்படுத்தப்பட்டு கண்மாய்களிலுள்ள கழுங்குகள் சீர் செய்யப்பட்டன. மேலும் பாசனத்திற்கான மடைகளும் சீர் செய்யப்பட்டு வருகின்றன.

தேவைப்படுகின்ற இடங்களில் புதிய மடைகள் கட்டித்தரப்படுகின்றன. பாசன கண்மாய்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்படுவதுடன் நீர்வரத்து கால்வாய்களும் சீரமைக்கப்படுகிறது. அதனால் தற்போது பெய்து வரும் மழையால் கண்மாய்களுக்கு தடையின்றி தண்ணீர் வந்து சேருகின்றன.

2 ஆயிரத்து 600 ஊராட்சி ஒன்றிய கண்மாய்களிலும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிமராமத்து திட்ட பணிகளை மேற்கொள்வதில் தமிழகத்தில் நமது மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story