பாளையங்கோட்டையில் வாகன சோதனை: காரில் கொண்டு சென்ற ரூ.1.34 லட்சம் பறிமுதல்


பாளையங்கோட்டையில் வாகன சோதனை: காரில் கொண்டு சென்ற ரூ.1.34 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Oct 2019 10:15 PM GMT (Updated: 1 Oct 2019 8:35 PM GMT)

பாளையங்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை, 

நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது.

இதனால் மாவட்டம் முழுவதும் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா ஒரு பறக்கும் படையும், ஒரு நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளன. இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதிக்கு மட்டும் 3 பறக்கும் படைகளும், 3 நிலைக்குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த குழுவினர் ஆங்காங்கே வாகன சோதனையை தீவிரப்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று காலையில் பாளையங்கோட்டை தபால்நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராஜசேகர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் மறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் ரகுமத்நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் இருந்தார். அவரிடம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 500 இருந்தது. அவரிடம் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. உடனே பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, அவரை காருடன் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று தனி தாசில்தார் சுமதியிடம் ஒப்படைத்தனர். அவரிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story