சிவகங்கை அரசு மருத்துவமனையில் 95 படுக்கை வசதியுடன் தீவிர காய்ச்சல் சிகிச்சை பிரிவு; டீன் குழந்தைவேல் தகவல்


சிவகங்கை அரசு மருத்துவமனையில் 95 படுக்கை வசதியுடன் தீவிர காய்ச்சல் சிகிச்சை பிரிவு; டீன் குழந்தைவேல் தகவல்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:15 AM IST (Updated: 2 Oct 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அரசு மருத்துவமனையில் 95 படுக்கை வசதியுடன் கூடிய தீவிர காய்ச்சல் பிரிவு செயல்படுகிறது என்று மருத்துவமனை டீன் குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கையில் பல்வேறு நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் என ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க கொசுவலை பொருத்திய 95 படுக்கை வசதியுடன் கூடிய தீவிர காய்ச்சல் சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் கூறியதாவது:- மருத்துவமனை பொது மருத்துவ சிகிச்சை பிரிவின் கீழ் தரைத்தளம், முதல் தளத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென டெங்கு காய்ச்சல் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேர்க்கப்படுபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆண்கள், பெண்கள் பிரிவுக்கு தலா 30 படுக்கைகள், குழந்தைகள் வார்டுக்கு 25 படுக்கைகள் கொசுவலையுடன் தயாராக உள்ளன. டெங்கு காய்ச்சல் நோயாளிகள் பூரண குணமடைந்த பின்பு, 72 மணி நேரம் தொடர் கண்காணிப்பில் வைத்திட தனியாக 10 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு (ஸ்டெப்டவுன் வார்டு) தொடங்கி செயல்பட்டு வருகிறது.

இங்கு டெங்கு இல்லை என உறுதி செய்த பின்னரே, இங்கு சேர்க்கப்பட்டவர்கள் சாதாரண வார்டிற்கு மாற்றி சிகிச்சை அளித்து, வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு சிறப்பு சிகிச்சை பிரிவுக்கும் ரத்த சிவப்பு அணுக்கள் கணக்கெடுப்பு எந்திரம் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story