காட்பாடியில் நடந்த சம்பவத்தில் திருப்பம் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண்


காட்பாடியில் நடந்த சம்பவத்தில் திருப்பம் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:15 AM IST (Updated: 2 Oct 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரது மனைவியே கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

காட்பாடி, 

காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பவானி (வயது 41). இவர்களுக்கு சவுமியா, மோனிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் சைக்கிள் கடை நடத்தி வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சரவணன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 2-ந் தேதி சரவணன் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மது குடிக்க பணம் கொடுக்காததால் சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பவானி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சரவணனின் சாவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசார் பார்த்தபோது, அதில் சரவணன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பவானியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

நான் காட்பாடியை சேர்ந்த வேலாயுதம் (35) என்பவரின் மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். வேலாயுதம் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து செல்வார். இதனால் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். நாளடைவில், அது கள்ளக்காதலாக மாறியது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான எனது கணவர் அடிக்கடி என்னுடன் தகராறு செய்வார். இதனால் வேலாயுதம் எனது கணவரை கண்டித்தார். பின்னர் சென்னையில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் அவரை அனுமதித்தோம். 3 மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் மீண்டும் மது குடித்துவிட்டு தகராறு செய்தார். எனவே எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் எனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தோம். சம்பவத்தன்று சரவணன் அதிக மது போதையில் வீட்டிற்கு வந்தார். நானும், வேலாயுதமும் சேர்ந்து பிளாஸ்டிக் வயர் மூலம் சரவணின் கை கால்களை கட்டி, கழுத்தை நெரித்தும், பிளாஸ்டிக் பைப்பால் அடித்தும் கொலை செய்தோம். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவருடைய உடலை துப்பட்டாவில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடக மாடினோம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பவானி மற்றும் அவரது கள்ளக்காதலன் வேலாயுதம் ஆகிய இருவரையும் காட்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர். கள்ள காதலுக்காக தாலி கட்டிய கணவனை, மனைவியே அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story