தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் - விழுப்புரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணம்
விழுப்புரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் கோவலன். இவரது மகன் விஜயகுமார் என்கிற சேட்டு (வயது 25). பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி நான்சி. இவர்களுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.
விழுப்புரத்தில் அரசு அலுவலகம் மற்றும் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணிக்காக விஜயகுமார் சென்றிருந்தார். சம்பவத்தன்று அந்த கட்டிடத்தின் ஒருபகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அந்த கட்டிடத்தில் பணியாற்றுபவர்கள் சென்று பார்த்தபோது உள்பக்கம் தாழ் போடப்பட்ட அறையில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயகுமார் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியது.
இதனையடுத்து விஜயகுமாரின் உடலை போலீசார் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் விஜயகுமாரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அப்போது விஜயகுமாரின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆம்புலன்சில் இருந்து உடலை வாங்காமல் காட்பாடி ரோடு 4 முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட போலீசார் விஜயகுமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள் விஜயகுமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அதனை விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து உறவினர்கள் விஜயகுமாரின் உடலை பெற்றுக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story