ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதற்கு எதிர்ப்பு


ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதற்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

பணி ஓய்வு பெறும் நாள் அன்று ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் சந்தியாகப்பன் தொடங்கி வைத்தார். மாரிக்கனி, சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வு பெறும் நாள் அன்று ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே நேரடியாக நடைமுறை படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையினை ஓய்வூதியர் அனைவருக்கும் வழங்க வேண்டும், அனைத்து காலி இடங்களையும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதேபோல சிவகாசி தாலுகா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி கிளையின் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட தலைவர் முருகேசன் ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் வைத்தியநாதன், மகாலட்சுமி, பரமசிவம், ராம கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story