மீன்கள் செத்து மிதந்த சுண்ணாம்பாற்றில் சென்னை விஞ்ஞானிகள் ஆய்வு


மீன்கள் செத்து மிதந்த சுண்ணாம்பாற்றில் சென்னை விஞ்ஞானிகள் ஆய்வு
x
தினத்தந்தி 2 Oct 2019 4:15 AM IST (Updated: 2 Oct 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

மீன்கள் செத்து மிதந்த சுண்ணாம்பாற்றில் சென்னை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்கள் செத்து மிதந்தன. அடுத்த சில நாட்களில் இடையார்பாளையம் அருகே உள்ள நீரோடையிலும் மீன்கள் அதிகளவில் இறந்து கிடந்தன. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.

இதை அறிந்த அரசு கொறடா அனந்தராமன், சுற்றுச்சூழல் துறை முதுநிலை பொறியாளர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் சுண்ணாம்பாறு மற்றும் இடையார்பாளையம் நீரோடையில் நேரில் ஆய்வு செய்தனர். செத்து மிதந்த மீன்கள் மற்றும் தண்ணீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.

ஆற்று நீரில் ஆக்சிஜன் குறைந்த காரணத்தால் மீன்கள் செத்து இருக்கலாம் எனவும், ஆற்றின் முகத்துவாரத்தை திறந்துவிட்டால் தண்ணீர் மறு சூழற்சி ஏற்பட்டு மீன்கள் இறந்துபோக வாய்ப்பு குறையும் என்று ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து சுண்ணாம்பாறு கடலில் கலக்கும் முகத்துவாரப்பகுதியில் ஏற்பட்டிருந்த அடைப்பு பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டது.

இந்த நிலையில் சுற்றுலா மற்றும் மீன்வளத்துறை செயலர் பூர்வார் கார்க், மீன் வளத்துறை இயக்குனர் முனுசாமி, துணை இயக்குனர் தெய்வசிகாமணி, சுற்றுலாத்துறை மேலாண் இயக்குனர் முருகேசன் ஆகியோர் 2-வது முறையாக நேற்றும் சுண்ணாம்பாற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள மத்திய அரசு நில அறிவியல் அமைச்சகத்தின், தேசிய கடற்கரை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழு நேற்று சுண்ணாம்பாற்றுக்கு வந்தது. இந்த குழுவினர் விஞ்ஞானிகள் சுப்ரத்நாயக், உமாகான் பிரதான், கவியரசன், எழிலரசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் படகு மூலம் ஆற்றுக்குள் சென்று தண்ணீர், மண் மற்றும் செத்து மிதந்த மீன்களை மாதிரிக்காக சேகரித்தனர். அவற்றை ஆய்வுக்காக சென்னைக்கு எடுத்துச்சென்றனர்.

Next Story