தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? சித்தராமையா கேள்வி
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ராய்ச்சூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசு நடந்து வந்தது. பா.ஜனதா ஆட்சி அமைய வழி ஏற்படுத்தும் நோக்கத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனால் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதாவினர் பல்வேறு ஆசைகளை காட்டினர்.
தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்கும்போதே, அந்த 17 பேருக்கும் மந்திரி பதவி வழங்குவதாக எடியூரப்பா உறுதியளித்தார். ஆனால் எடியூரப்பா அளித்த வாக்குறுதிப்படி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. பின்னர் இடைத்தேர்தலில் அவர்களுக்கு டிக்கெட் வழங்குவதாக எடியூரப்பா கூறினார். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது?.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி.யுடன் தனி விமானத்தில் மும்பைக்கு சென்றனர். இதை கட்சி தாவல் என்று சொல்லாமல் வேறு என்னவென்று கூற முடியும்?. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என்று கூறி ராஜினாமா செய்திருந்தால் அதை ஒப்புக்கொள்ளலாம்.
சுப்ரீம் கோர்ட்டிலும் சபாநாயகரின் நடவடிக்கையை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளது. கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை ஒதுக்குவதில் பிரதமர் மோடி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறார். பிரதமர் பெங்களூரு வந்தபோதும், வெள்ள பாதிப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை. வெள்ளத்தால் சாலைகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துவிட்டனர்.
2009-ம் ஆண்டு வடகர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் நேரில் வந்து சேதங்களை பார்வையிட்டார். உடனே ரூ.1,500 கோடி நிதி வழங்கினார். விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை எடியூரப்பா ஒதுக்கிவிட்டார். வெள்ளம் மற்றும் வறட்சி குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை 20 நாட்கள் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்த வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story