பா.ஜனதாவில் சேர்ந்த கையோடு தேர்தல் டிக்கெட் பெற்ற காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்
பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு பா.ஜனதா தேர்தல் டிக்கெட் கொடுத்து உள்ளது. பா.ஜனதாவின் மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே, மந்திரி வினோத் தாவ்டே ஆகியோரது பெயர் முதல் பட்டியலில் இடம் பெறாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா நேற்று வெளியிட்டது. இதில் 125 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்களில் 12 பேர் பெண்கள்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் உதவியாளர் அபிமன்யு பவாருக்கு பா.ஜனதா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து உள்ளது. அவர் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள அவுசா தொகுதியில் போட்டியிடுகிறார்.
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் அணி, அணியாக விலகிய அக்கட்சிகளின் தலைவர்கள் பலருக்கும் கட்சியில் இணைத்து கொண்ட கையோடு தேர்தல் டிக்கெட்டையும் பா.ஜனதா கொடுத்து உள்ளது.
இதன்படி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த ஹர்ஷ்வர்தன் பாட்டீல் இந்தாப்பூரிலும், ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ஷீரடியிலும், வைபவ் பிச்சாட் அகோலேயிலும், ஜெய்குமார் கோரே மானிலும், மதன் போஸ்லே வைய்யிலும், ரானா ஜெக்தீஷ் பாட்டீல் துல்ஜாபூரிலும், காளிதாஸ் கோலம்கர் வடலாவிலும், சிவேந்திரராஜே போஸ்லே சத்தாராவிலும், சந்தீப் நாயக் ஐரோலியிலும் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்கள்.
எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சீட் வழங்கி முதல் பட்டியலிலேயே அவர்களது பெயர் வெளியான நிலையில், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் பெயர் முதல் பட்டியலில் வெளியாகாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த பா.ஜனதா தலைவர் ஏக்நாத் கட்சே, மந்திரி வினோத் தாவ்டே ஆகியோரது பெயர் முதல் பட்டியலில் இடம் பெறவில்லை.
முல்லுண்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சர்தார் தாராசிங்கிற்கு இந்த முறை பா.ஜனதா வாய்ப்பு கொடுக்கவில்லை. இவர் கடந்த 1999-ம் ஆண்டு முதல் முல்லுண்டு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். 80 வயதான அவருக்கு முதுமையை காரணம் காட்டி இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீட் கொடுக்காமல் பா.ஜனதா புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முல்லுண்டு தொகுதி வேட்பாளராக இந்த முறை மிஹிர் கோட்டேச்சா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கோத்ருட் தொகுதி எம்.எல்.ஏ. மேத்தா குல்கர்ணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அந்த தொகுதியில் மாநில பா.ஜனதா தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் களம் இறக்கப்பட்டு இருக்கிறார். தானே மாவட்டத்தில் உள்ள 9 பா.ஜனதா எம்.எல்.ஏ.க் களில் இரண்டு பேரை தவிர மற்ற அனைவருக்கும் மீண்டும் சீட் கொடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story