குன்னூர் மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


குன்னூர் மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Oct 2019 3:15 AM IST (Updated: 2 Oct 2019 8:04 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

குன்னூர், 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வி.பி.தெரு பகுதியில் குன்னூர் நகராட்சி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அரிசி, பருப்பு போன்ற தானிய வகைகள், தக்காளி, கத்தரிக்காய் உள்பட நாட்டுக்காய்கறிகள் மற்றும் பழ வகைகள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு லாரிகளில் கொண்டு வரப்படும் சரக்குகள் வி.பி.தெருவில் நிறுத்தப்பட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் இறக்கப்படுகிறது.

தற்போது வி.பி.தெரு பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து உள்ளன. இதனால் சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் மார்க்கெட்டுக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு கடைகளால் சாலைகள் குறுகிவிட்டன. இதன்காரணமாக அங்கு அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. இதேபோல் வி.பி.தெருவில் வாகனங்களும் சீராக நிறுத்தப்படுவதில்லை.

இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், சாலைகளை சீரமைக்கக்கோரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று முதல் காலை வரையரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘குன்னூர் வி.பி.தெருவில் உள்ள மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலைகள் குறுகி காணப்படுவதால், பொருட்களை ஏற்றி வரும் லாரிகளில் இருந்து அதனை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

குறிபிபாக லாரிகளில் இருந்து இறக்கப்படும் சரக்குகளை மூட்டைகளில் கொண்டு செல்லும் போது கால் தவறி கீழே விழுந்து விடுகிறோம். அதனால்தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்போது தொடங்கி உள்ளோம். எனவே வி.பி.தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை சீரமைத்து சரக்குகளை சீராக கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்த போராட்டம் தொடரும்’ என்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக லாரிகளில் கொண்டு வரப்பட்ட காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அழுகும் நிலை ஏற்படலாம். அதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும்.

எனவே சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story