ரூ.72 லட்சத்துக்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்


ரூ.72 லட்சத்துக்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:00 AM IST (Updated: 2 Oct 2019 9:25 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் ரூ.72 லட்சத்துக்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கதர் ஆடைகள் மற்றும் கிராம பொருட்கள் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு ஆர்.கணே‌‌ஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த மகாத்மா காந்தியின் நினைவுகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ந் தேதியை காந்தி ஜெயந்தியாக கொண்டாடி வருகிறோம். கிராம ராஜ்ஜியம், நமது பாரதம், சுதேசியம் மற்றும் தேசியம் போன்ற மகாத்மா காந்தியின் சிந்தனையில் உதித்த தொலைநோக்கு கருத்துகள், கோட்டுப்பாடுகளால்தான் கதர் கிராம தொழில்கள் என்ற கதர் தொழில் அமைப்பு உருவானது.

இந்தியா 70 சதவீதம் விவசாய தொழிலை சார்ந்து உள்ளது. கடந்த காலங்களில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் விவசாய தொழில்கள் நடந்தன. மற்ற 6 மாதங்களில் எந்தவித விவசாய தொழிலும் நடக்கவில்லை. இதனால் விவசாயிகளின் சோம்பலை முறிக்கும் வகையிலும், கிராம முன்னேற்றத்துக்காகவும் கதர் தொழிலை மகாத்மா காந்தி கொண்டு வந்தார். இவ்வாறு தொடங்கப்பட்ட கதர் கிராம தொழில் அமைப்பு தற்போது பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.

குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பருத்தி நூல் உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் கிடைக்கும் நூல்களை கொண்டு அதிக அளவிலான நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பட்டு நூலினை கொண்டு பட்டு நெசவுத்தொழிலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வாரியத்தின் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டில் ரூ.72 லட்சத்துக்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டும் தமிழக அரசு கதர் கிராம தொழில்கள் ஆணைக்குழுவினரால் கதர் ஆடைகள் விற்பனைக்கு மானியம் வழங்குகிறது. குறிப்பாக காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியாக கதர் ஆடை ஒன்றுக்கு 30 சதவீதமும். பட்டுக்கு 30 சதவீதமும், பாலியஸ்டருக்கு 30 சதவீதமும், உல்லனுக்கு 20 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சேரிங்கிராசில் காதி கிராப்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 தற்காலிக கதர் ஆடைகள் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story