திருக்கோவிலூர் அருகே, லாரியில் கடத்திய 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் உள்பட 2 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே லாரியில் கடத்திய 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று காலை திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை மார்க்கமாக சென்ற லாரி ஒன்றை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றார். உடனே போலீசார் அந்த லாரியை விரட்டி சென்று வழிமறித்து சோதனை செய்தனர். அதில், 16 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே லாரி டிரைவர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், லாரி டிரைவர் வேலூர் மாவட்டம் கொசப்பேட்டையை சேர்ந்த சரவணன்(வயது 39), மற்றொருவர் கிளனரான திருக்கோவிலூர் அடுத்த அரியூரை சேர்ந்த ராமச்சந்திரன்(49) ஆகியோர் என்பதும், திருக்கோவிலூர் பகுதி ரேஷன் கடைகளில் இருந்து மொத்தம் 16 டன் அரிசியை வாங்கி லாரியில் ஏற்றி வேலூருக்கு கடத்தி சென்றபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் மற்றும் கிளனரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியையும், லாரியையும் பறிமுதல் செய்து விழுப்புரம் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.
ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணைபோன திருக்கோவிலூர் பகுதி ரேஷன் கடை விற்பனையாளர்கள் யார்?-யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 16 டன் ரேஷன் அரிசியை லாரியில் கடத்திய 2 பேரை கைது செய்த மணலூர்பேட்டை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story