வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே பரபரப்பு


வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 3 Oct 2019 3:45 AM IST (Updated: 2 Oct 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி,

புதுச்சேரியில் இருந்து கடந்த 30-ந்தேதி திருவண்ணாமலைக்கு பட்டாசுகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராமம் வழியாக சென்றபோது திடீரென வெடித்து சிதறியது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசுகள் வெடித்த இடத்தின் அருகே இருந்த 5-க்கும் மேற்பட்ட கடைகளும், 10-க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து புதுச்சேரியை சேர்ந்த பட்டாசு குடோன் உரிமையாளர் வீராசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்தை நேற்று முன்தினம் மத்திய வெடிபொருள் ஆய்வு கட்டுப்பாடு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், தடயங்களை சேகரித்து சென்றனர்.

இந்தநிலையில் நங்கிலிகொண்டான் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை அங்குள்ள செஞ்சி-திண்டிவனம் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்து சிதறியதில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி தாசில்தார் கோவிந்தராஜன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர் குலோத்துங்கன், செஞ்சி இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கிராம மக்களிடம் கூறுகையில், வெடிவிபத்து குறித்து மாவட்ட கலெக்டருக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் முடிந்ததும் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story