ஓட்டப்பிடாரம் அருகே, லாரிகள், கார் அடுத்தடுத்து மோதல்; டிரைவர் பலி - 3 பேர் காயம்
ஓட்டப்பிடாரம் அருகே 2 லாரிகள், கார் அடுத்தடுத்து மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவருடைய மகன் கோபால் (வயது 45). லாரி டிரைவர். இவர் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்தார்.
நேற்று மதியம் 3 மணி அளவில் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை வடபுறம் பகுதியில் சென்றபோது, நாற்கர சாலையில் பஞ்சராகி நின்ற மற்றொரு லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே கன்டெய்னர் லாரியை பின்தொடர்ந்து வேகமாக வந்த காரும், கன்டெய்னர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் அந்த காரில் இருந்த 2 பேரும் காயம் அடைந்தனர்.
மேலும் பஞ்சராகி நின்ற லாரியில் டயரை கழட்டி கொண்டிருந்த டிரைவரான பெங்களூரு சாம்ராஜ் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சபாபதி (27) என்பவரும் காயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்த லாரி டிரைவர் சபாபதியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், காரில் காயம் அடைந்த 2 பேரை மீட்டு தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் இறந்த கோபாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கோபாலுக்கு நந்தினி என்ற மனைவியும், சுந்தர்ராஜ், பெரிய ஆகாஷ் ஆகிய 2 மகன்களும், சீதா என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story