ஈரோட்டில் இருந்து கேரளா சென்ற ரெயிலில், செல்போன் திருடியவரை பிடித்த டிக்கெட் பரிசோதகர்
ஈரோட்டில் இருந்து கேரளாவுக்கு சென்ற ரெயிலில் செல்போன் திருடியவரை டிக்கெட் பரிசோதகர் பிடித்தார்.
ஈரோடு,
ஈரோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் எம்.ஜெயப்பிரகாஷ். இவர் தெற்கு ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஈரோடு வழியாக கேரளாவுக்கு செல்லும் ‘கேப்’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணியில் இருந்தார். அந்த ரெயில் 27-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு பாலக்காடு ரெயில் நிலையத்துக்கு சென்று சேர்ந்தது. அப்போது ரெயிலில் இருந்த பயணிகள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். ரெயில் தண்டவாளத்தில் நின்றபோது, டிக்கெட் பரிசோதகர் ஜெயப்பிரகாஷ், ரெயிலில் இருந்து இறங்கி வெளியே நின்று பயணிகள் பட்டியலை சரிபார்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் ரெயில்பெட்டியின் வாசல் வழியாக வேக வேகமாக சென்றார். அது எஸ் 5 பெட்டி. அந்த பெட்டியில் பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து ஏற வேண்டிய பயணிகள் யாரும் இல்லை என்பதால், டிக்கெட் பரிசோதகர் விரைவாக ஏறி, உள்ளே சென்ற வாலிபரை கவனித்தார். அப்போது அந்த வாலிபர் அந்த பெட்டியை கடந்து எஸ் 6 பெட்டிக்குள் நுழைந்தார்.
இது டிக்கெட் பரிசோதகருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் வேகமாக சென்று 6-ம் எண் பெட்டியில் பார்த்தார். அந்த வாலிபர் அதையும் கடந்து சென்றுகொண்டிருந்தார். அவர் ஏன் செல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள, டிக்கெட் பரிசோதகரும், பெட்டியில் இருந்து வெளியே சென்று ஒவ்வொரு பெட்டியாக கடந்து சென்றார். வேகமாக சென்ற அந்த வாலிபர் எஸ் 10 பெட்டியில் இருந்து எதுவும் தெரியாதது போன்று இறங்கி பிளாட்பாரத்தில் நடந்தார்.
பின்னால் ஓடி வந்த டிக்கெட் பரிசோதகர் ஜெயப்பிரகாஷ் அந்த வாலிபரை கட்டிப்பிடித்து வைத்துக்கொண்டு ஏன்? பெட்டியில் ஏறினாய் என்று கேட்டார். ஆனால் அந்த வாலிபர் எந்த பதிலும் கூறாமல் தப்பித்துச்செல்ல முயற்சித்தார். அப்போது அந்த பிளாட்பாரத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 2 பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் டிக்கெட் பரிசோதகர் சத்தமிட்டு அழைத்தார். அவர்களும் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்துக்கொண்டனர்.
அந்த நேரம் ரெயிலுக்கு சிக்னல் கிடைத்ததும், ரெயில் புறப்பட்டது. உடனடியாக ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த வாலிபரை பிடித்து ரெயிலில் ஏற்ற முயன்றனர். ஆனால் அவர் திமிறிக்கொண்டு ஏற மறுத்தார். இந்த களேபரத்தை பார்த்த பயணிகள் சிலரும் சேர்ந்து அந்த வாலிபரை ரெயிலுக்குள் ஏற்றினார்கள். நிலையத்தை விட்டு ரெயில் வெளியேறியது. பின்னர் அந்த வாலிபரை போலீசார் சோதனையிட்டபோது அவரிடம் 3 விலை உயர்ந்த செல்போன்கள் இருந்தது. அவை ரெயிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த 3 பயணிகளிடம் இருந்து திருடியதை ஒப்புக்கொண்டார்.
ரெயில் நிலையங்களில் வண்டி நிற்கும்போது சார்ஜரில் போடப்பட்டு இருக்கும் செல்போன்களை திருடுவதை அவர் வழக்கமாக கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பயணிகளிடம் இருந்து புகார் எழுதி வாங்கிய டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மதுசூதனன், சுரேஷ்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட வாலிபரை அடுத்து வந்த திருச்சூர் ரெயில் நிலைய போலீசில் ஒப்படைத்தனர். பணி முடிந்து ஈரோடு வந்த அவரை சக டிக்கெட் பரிசோதகர்கள் நேற்று பாராட்டி மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story