நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்


நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:15 AM IST (Updated: 3 Oct 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? என நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். மழை பெய்தால் வீணாகிவிடும் என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றை நம்பியே குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது குறுவை நெல் அறுவடை பணி தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

வியாபாரிகளிடம் விற்பனை

மழை 2 நாட்களாக பெய்யாததால் குறுவை நெல் அறுவடை பணி மீண்டும் நடைபெற்று வருகிறது. போதிய அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த வயலூர், ராமாபுரம், குருவாடி, தோட்டக்காடு, சாரப்பள்ளம், கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்த நெல்லை வயலூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு இப்பகுதிகளில் அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

காத்திருப்பு

ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. விரைவில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் அறுவடை செய்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். அங்கு சாலை ஓரங்களிலும், கொள்முதல் நிலையத்தின் முகப்பிலும் நெல்லை கொட்டி சாக்குகள், தார்பாயை போட்டு மூடி வைத்து இரவு, பகலாக விவசாயிகள் காத்திருந்து பாதுகாத்து வருகின்றனர்.

தஞ்சை பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அறுவடை செய்யப்பட்ட நெல், ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. ஈரமான நெல்லை சாலையோரம் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். மழை வந்தால் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் நனைந்து வீணாகிவிடும் என்பதால் வயலூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.

முளைத்துவிடும்

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் நெல்லை அறுவடை செய்ய சிரமமாக இருக்கிறது. சில இடங்களில் அறுவடை பணி முடிவடைந்து நெல்லை கொண்டு வந்து சாலையோரம் கொட்டி வைத்துள்ளோம். கடந்த 1-ந் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் திறக்கப்படவில்லை.

ஓரிரு நாட்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கிறோம். மழை வந்தால் அவ்வளவு தான் நெல் நனைந்து முளைத்துவிடும். அப்படி முளைத்துவிட்டால் இவ்வளவு நாட்கள் க‌‌ஷ்டப்பட்டு உழைத்தது எல்லாம் வீணாகிவிடும். இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை பணி தீவிரமடைந்து நெல் வரத்து அதிகரிக்கும். எனவே மழையில் நெல் நனைவதற்கு முன்பாக கொள்முதல் நிலையத்தை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகளும் விலையை குறைத்துவிட்டனர். தொடக்கத்தில் 62 கிலோ எடை நெல் மூட்டையை ரூ.1,050-க்கு வாங்கினார்கள். ஆனால் தற்போது ரூ.900-க்கு தான் நெல்லை வாங்கி செல்கின்றனர் என்றார்.

Next Story